சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு மாநாட்டின் நிறைவு அமர்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பளீச் பேச்சாற்றினார். அவர் கூறியதாவது,“தமிழகத்தில் அதிகார துஷ்பிரயோகத்துடன் ஆட்சி செய்த திமுகவை ஒழிக்க மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கினார். அந்த இயக்கத்தை கடந்த பல புயல்களுக்கும் நடுவில் தன்னுடைய ஆற்றலும், தன்னம்பிக்கையும் கொண்டு காத்தெடுத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.

‘அமைதி – வளம் – வளர்ச்சி’ என்ற அவர் வைத்த வழிகாட்டுதல்தான் இன்று வரை அதிமுகவை முன்னே கொண்டு செல்கிறது.நாம் ஆட்சியிலிருந்த போதும் விமர்சனம் செய்யப்படினோம்; இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் நம்மை குறிவைக்கும் விமர்சனங்கள் நிற்கவில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு என்று யாரும் இல்லை – மக்களையே தாங்கள் வாரிசாக ஏற்றுக் கொண்டார்கள். அதனால் தான் அதிமுகவை எந்த சக்தியும் குலைக்க முடியாத நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஸ்டாலின் அவர்களே, அன்றைக்கு சட்டையை கிழித்து வெளியே வந்தீர்கள்… வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்த பின், நீங்கள் எந்த நிலையில் இருப்பீர்கள் என்பதை நினைத்தாலே புரியும்! இன்று எதிர்க்கட்சிகளும், திமுகவுமே கூட நமது ஆட்சியை குறை சொல்ல முடியாத நிலை.
அந்த பொற்கால ஆட்சியை மீண்டும் மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.நம் பண்பாட்டையும், மக்கள் நம்பிக்கையையும் கொண்டு செயல்பட்டால், இந்த முறை நிச்சயமாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
100% வெற்றி எங்களுக்கே! அதிமுக கூட்டணி குறைந்தது 210 இடங்களில் தெளிவான வெற்றி பெறும். அதை எந்த சக்தியும் தடுக்க முடியாது,” என்று அவர் உறுதியுடன் உரையாற்றினார்.