ரூ.1,020,00,00,000 ஊழல்! கம்பி எண்ணப் போவது உறுதி! ஸ்டாலின் அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணம் - இபிஎஸ் பரபரப்பு அறிக்கை!
Seithipunal Tamil December 09, 2025 11:48 PM

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ரூ. 1,020,00,00,000 !!!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.

வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,

-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.

இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்?

காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.

உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.