இந்திய கிரிக்கெட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் யசஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். டெஸ்ட் அறிமுகத்திலிருந்தே அசத்தலான சதங்கள், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அடித்த மாபெரும் இன்னிங்ஸ், அவரை இந்திய அணியின் நிலையான ஓப்பனராக மாற்றியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்திய அவர், ஏற்கெனவே 2023 ஆசிய விளையாட்டு டி20 போட்டிகளில் இந்தியாவை தங்கப்பதக்கம் வெல்ல உதவியிருந்தார். இதன் மூலம் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஆனால் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் சுப்மன் கில் இருப்பதால், ஓப்பனிங் இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது தன் பெரிய கனவு எனவும், நேரம் வந்தால் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தும் ஆசையும் உள்ளதாகவும் யசஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது:“டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது என் கனவு. அதற்காக நான் என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பேன். ஒருநாள் இந்தியாவை தலைமைத்தாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நான் தயாராக இருக்கிறேன்.”
சுப்மன் கில் இப்போது ஓப்பனராகவும், எதிர்கால கேப்டனாகவும் தேர்வுக்குழுவின் முழு ஆதரவைப் பெறும் நிலையில், ஜெய்ஸ்வாலின் கனவு எப்போது நிறைவேறும் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், கம்பீர் தலைமையிலான தேர்வுக்குழு தங்கள் திட்டத்தில் கில்லுக்கு முக்கிய பங்கு அளிப்பது, ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற திறமைசாலிகளை புறக்கணிக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2027 உலகக்கோப்பைக்கு முன் விராட்–ரோஹித்தை கூட கழற்றி விட முயற்சி நடக்கிறது என்ற பேச்சுகள் நடுவில், ஜெய்ஸ்வாலின் ஆசைகள் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.