சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்கிய ஆசிய வளர்ச்சி வங்கி
Top Tamil News December 16, 2025 02:48 AM

சென்னை மெட்ரோ 2 ம் கட்ட திட்ட  விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன் வழங்கியுள்ளது.


சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில்,சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2,000 கோடி) கடன் உதவி அளித்துள்ளது. இந்த நிதி உதவி சென்னை மெட்ரோ ரயில் முதலீட்டுத் திட்டத்தின் 2ம் கட்ட நிதியாகும்.2022ம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கி இத்திட்டத்திற்கு மொத்தம் 780 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது. முதல் கட்டமாக 350 மில்லியன் டாலர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த 2ம் கட்ட நிதி மூலம் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 மெட்ரோ வழித்தடங்களில் முக்கிய பகுதிகளில் சுமார் 20 கி.மீ தூரம் அமைக்கப்படும். இதில் உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதைகள் இரண்டும் அடங்கும். 18 புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.