'தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை'; கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும்'; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை..!
Seithipunal Tamil December 16, 2025 04:48 AM

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும்.  என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

''கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 45 ஆண்டுகளாகத் தோற்கடிக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த கேரள இடது சாரி முன்னணியை பாஜ தனித்து களம் கண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் பாஜ கால் பதித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கையும், கேரள பாஜ தொண்டர்களின் தொய்வில்லாத உழைப்பும்தான்.

பூத் கமிட்டி உறுப்பினர்களின் இடைவிடாத உழைப்பின் காரணமாகக் கிடைத்த பாஜகவின் இந்த அபார வெற்றி தமிழக பாஜகவிற்குப் புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் பாஜ எல்லா சட்டசபை தொகுதியிலும் பூத் வாரியாக கமிட்டிகளை நியமித்துவிட்டது. அவர்களுக்கான பயிற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும்.

தகுதியில்லாத புது வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அதனை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுகிறது. அதனை நாம் முறையாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தருவோம். பிரதமர் மோடிக்கு அவ்வெற்றியைச் சமர்ப்பிப்போம்.'' என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.