2026 சட்டமன்ற தேர்தல் விருப்ப மனு விவகாரத்தில் அன்புமணி தரப்பு பண மோசடி செய்வதாக டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, “ராமதாஸ் உடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி கூறுவது நியாயமல்ல. என்னை பார்த்து துரோகி என அன்புமணி கூறுவது வேதனை அளிக்கிறது. அன்புமணிக்கு துரோகம் செய்ய நினைத்ததே இல்லை. தனது குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் உறுதியாக இருந்தார். ராமதாஸை சம்மதிக்க வைத்து, அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது நான் தான். அன்புமணியால் ஏற்பட்டுள்ள சோதனைகளை பார்த்து ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். பாமகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி சொல்லி மாளாது.
தனது தந்தையுடன் அன்புமணி இணைந்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்றால் கட்சியை விட்டு விலகவும் தயார். அன்புமணி யார், யார் துரோகிகள் என நினைக்கிறாரோ, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம். நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்.எல்.ஏ பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதற்காக வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டோம். மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருவோம்.சிறை கொடுமைகளை அனுபவித்து வளர்ந்த பாமகவுக்கு ஒரு சோதனை என்றால் ராமதாஸால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.