பெயர் மாற்றம் முதல் கூட்டணி முடிவு வரை…! ஓ.பன்னீர்செல்வத்தின் 23-ந் தேதி அரசியல் ஆலோசனை...!
Seithipunal Tamil December 16, 2025 04:48 AM

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது “அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என்ற அமைப்பை வழிநடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் சார்பில், வருகிற 23-ம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில், இதுவரை “அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என குறிப்பிடப்பட்டிருந்த அமைப்பின் பெயர், தற்போது “அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம்” என மாற்றப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில், தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம், வருகிற 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.