மாரடைப்பால் துடிதுடித்த கணவன்.. நடுரோட்டில் உதவிக்கேட்டு பரிதவித்த மனைவி.. மரித்த மனிதநேயம்..
TV9 Tamil News December 17, 2025 06:48 PM

பெங்களூரு, டிசம்பர் 17: பெங்களூருவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிருக்கு போராடிய நபர், உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி சாலையில் செல்பவர்களிடம் கண்ணீர் மல்க உதவி கேட்டும், அந்தப் பக்கம் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவி செய்ய முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, நடந்த இந்த துயரச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதறச் செய்துள்ளது. அதோடு, மனிதநேயம் மரித்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவர் உதவியிருந்தால் கூட, அந்த உயிரை காப்பாற்றியிருக்கு முடியும், அந்த குடும்பத்தை வேதனையில் ஆழ்த்தாமல் மீட்டிருக்க முடியும். இதைபார்க்கும் பலரும் ஆதங்கத்துடன் கேட்கும் ஒரே கேள்வி மனிதநேயம் எங்கே சென்றது? என்பது தான். அதோடு, இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் எடுத்த முடிவு அனைவரையும் சிலிர்க்கச் செய்துள்ளது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!

நள்ளிரவில் ஏற்பட்ட மாரடைப்பு:

பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் வெங்கடரமணன் (34). கடந்த 14ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், மனைவி ரூபாவுடன் பைக்கில் கத்திரிகுப்பே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாததால், அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு இசிஜி (ECG) பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு லேசான மாரடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்க முடியாது என்பதால், உடனடியாக அருகில் உள்ள இதய மருத்துவமனைக்கு செல்லுமாறு அங்கிருந்த ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய கணவன் – மனைவி:

அதோடு, அந்த மருத்துவனையில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் வசதியும் இல்லை எனத் தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி கணவன், மனைவி இருவரும் மீண்டும் பைக்கிலேயே, அவர்கள் சொன்ன இதய மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். அப்போது, கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்றபோது, வெங்கடரமணனுக்கு மீண்டும் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கடும் பதற்றத்தில் இருந்த அவரது மனைவி, நிலைத்தடுமாறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது அவர்களது பைக்கை மோதியுள்ளார். இதில், கணவன், மனைவி இருவரும் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

நடுரோட்டில் உதவிக்கேட்டு ஏங்கிய மனைவி:

தொடர்ந்து, காயங்களுடன் எழுந்த ரூபா, நடு ரோட்டிலேயே உயிருக்கு போராடிய கணவரை காப்பாற்ற அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை கைகாட்டி நிறுத்தி உதவி கேட்டார். ஆனால், அந்த சமயத்தில் சென்றவர்கள் யாரும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, செய்வதறியாத அவர் தங்களது நிலைக்குறித்து தனது மைத்துனிக்கு (வெங்கட்ராமணின் தங்கை) தகவல் தெரிவித்துள்ளார். அவர் விரைந்து வந்து தனது அண்ணனுக்கு சிபிஆர் (CPR) உள்ளிட்ட முதலுதவி அளித்து உயிரை காப்பாற்ற போராடியுள்ளார். தொடர்ந்து, அவரும் சேர்ந்த உதவிகேட்க, நீண்ட நேரத்திற்கு பிறகு கேப் ஓட்டுநர் ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்து, மூவரையும் ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வரும் வழியிலேயே வெங்கடரமணன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் தொடர்பா?.. எய்ம்ஸ் அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்கள்!

மரணத்தை கேட்டு துடிதுடித்த குடும்பம்:

இதை கேட்டு ரூபாவும், வெங்கடரமணனின் தங்கையும் மருத்துவமனையில் கதறி துடித்து அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் மூழ்க செய்தது. கடந்த 2020ல் தான் வெங்கடமணன், ரூபா தம்பதிக்கு திருமணம் நிகழ்ந்துள்ளது. அதோடு, அவர்களுக்கு 5 வயது ஆண் குழந்தையும், 18 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியான சிசிடிவி காட்சிகள்:

இதனிடையே, இந்த சம்பவத்தின் போது, உதவி கேட்டு நிற்கும் ரூபாவை யாரும் கண்டுகொள்ளாத காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது, அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் மனிதநேயமற்ற வாகன ஓட்டிகளின் செயலுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

நெகிழ வைத்த குடும்பத்தினர்:

இவ்வளவு துயரத்திலும் வெங்கடரமணின் குடும்பத்தினர், அவரது கண்களை தானம் செய்ய முன்வந்துள்ளனர். அவரது இறப்பு பார்வையற்ற ஒருவரது வாழ்வில் வெளிச்சை கொண்டுவரட்டும் என்று கூறி அனைவரையும் அவர்கள் நெகிழ வைத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.