தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் விபத்திற்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்பயணம், தற்போது ஈரோட்டில் மிகத் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் இந்த பிரம்மாண்ட கூட்டத்தை முன்னின்று நடத்துவதால் இது அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் மௌனம் காக்கிறார் என்றும், எல்லாவற்றுக்கும் ‘கம்முன்னு’ இருக்காமல் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் என்றும் பாஜக-வின் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், தற்போது அண்ணாமலைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை என்றும், நாளைய நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவதே தங்களின் முதல் கடமை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித நுழைவுச் சீட்டும் (Pass) தேவையில்லை என்றும், இதுவரை இல்லாத அளவிற்குப் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.