பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடரமணன் (34) நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். மனைவி ரூபாவுடன் பைக்கில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு டாக்டர்கள் இல்லாததால் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இ.சி.ஜி. பரிசோதனையில் லேசான மாரடைப்பு உறுதி செய்யப்பட்டு, உடனடியாக ஜெயதேவா மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தம்பதி பைக்கிலேயே புறப்பட்டனர்.

வழியில் கதிரேனஹள்ளி பாலம் அருகே இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதால் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வெங்கடரமணன் உயிருக்கு போராடினார்.
மேலும்,கணவரைக் காப்பாற்ற ரூபா வழியிலிருந்த வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். ஆனால் நீண்ட நேரம் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர் வெங்கடரமணனின் தங்கை வந்து முதலுதவி அளித்தார்.
தாமதமாக ஒரு கார் ஓட்டுநர் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வரும் வழியிலேயே வெங்கடரமணன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடுரோட்டில் உதவி கேட்டு தவித்த மனைவியை யாரும் பொருட்படுத்தாத காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, மனிதாபிமானம் குறித்த கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.