MOHAR SINGH MEENA/GAURAV பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா
ஐபிஎல் கோடீஸ்வரர்களை உருவாக்கும் ஒரு இயந்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டும், இது பல கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது.
இந்த ஆண்டு கோடீஸ்வரர்களாக உருவெடுத்தவர்களில் ஆகிப் நபி டார், பிரசாந்த் வீர் திரிபாதி மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் அதிகம் அறியப்படாத வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தேஜஸ்வி சிங் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முகுல் செளத்ரி ஆகியோரையும் இதே பிரிவில் சேர்க்கலாம்.
பிரசாந்த் வீர் திரிபாதி மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலா ₹14.2 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடாத அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இவர்கள்தான்.
ஆகிப் நபி டார் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹8.4 கோடிக்கு வாங்கப்பட்டார்.
Aqib's Family ஆகிப் டார் வலுவான மன உறுதி கொண்ட ஆகிப்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பிறந்த ஆகிப் நபி டார், வலுவான மன உறுதி கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர்.
அவரது தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால், அவரது குடும்பத்தில் பெரியளவு வசதிகள் இல்லை. அதுமட்டுமின்றி, அருகிலிருந்த கிரிக்கெட் மைதானம் 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகரில் இருந்தது.
ஆரம்பகாலத்தில் அவர் சந்தித்த சிரமங்களைப் பற்றி உள்ளூர் செய்தித்தாள் ஒன்று கேட்டபோது, "இந்தியாவிற்காக விளையாடுவதே உங்கள் இலக்காக இருந்தால், இவை எதுவும் ஒரு பொருட்டல்ல. உங்களிடம் குறைந்த வசதிகள் இருந்தாலும் அது முக்கியமல்ல. இந்திய அணியின் ஜெர்சியை அணிவதுதான் எனது இலக்கு" என்று அவர் பதில் அளித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவிற்காக விளையாடிய முதல் வீரர் பர்வேஸ் ரசூல் என்பது நமக்குத் தெரியும். அவர் விளையாடுவதைப் பார்த்துதான் ஆகிப்பும் கிரிக்கெட் மீது ஈர்க்கப்பட்டார்.
மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர அவர் பலமுறை சோதனை மேட்ச்களில் பங்கேற்றார். பெரும் போராட்டத்திற்குப் பிறகே அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.
2018-ல் 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் அறிமுகமான ஆகிப், அதன் பின் ஒருபோதும் பின்வாங்கவே இல்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபியில், 7.41 என்ற எக்கானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை ஆகிப் நிரூபித்தார்.
அதேபோல், ரஞ்சி கோப்பையில் ஒன்பது இன்னிங்ஸ்களில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்துக்கு எதிரான போட்டியில் வடக்கு மண்டலத்துக்காக அவர் ஹாட்ரிக் விக்கெட்டையும் எடுத்தார். அவர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆண்டு ரஞ்சி டிராபியில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்த, ஆகிப்பின் பந்துவீச்சு திறமை ஜம்மு காஷ்மீர் அணிக்கு உதவியது. அந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர் திரிபாதியை வாங்கியுள்ளது.
யுவராஜ் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு, அவரைப் பார்த்து வளர்ந்தவர்தான் பிரசாந்த்.
இருப்பினும், மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. இப்போது அவரது கனவு நனவாகியுள்ளதுடன், அவர் பெரும் செல்வந்தராகவும் மாறியுள்ளார்.
அமேதியில் ராஜேந்திர திரிபாதிக்கு மகனாகப் பிறந்த பிரசாந்துக்கு, சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், அவர் தனது பகுதியில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் விளையாடினார். அங்கு பயிற்சியாளர் காலிப்பிடம் ஆரம்பகால பயிற்சியைப் பெற்றார்.
20 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிரசாந்த், உத்தரபிரதேச அணிக்காக இரண்டு முதல்தர போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடித் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ஆனால், மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான டிராபியில், ஏழு போட்டிகளில் 19 சிக்ஸர்களுடன் 376 ரன்கள் குவித்தபோது அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கேட்ச் பிடிக்க முயன்ற அவருக்குக் கண்ணில் பலத்த அடிபட்டது. இதனால் அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்டன. ஆனால், அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது தனது திறனை நிரூபித்து வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பிறந்த கார்த்திக், ஆக்ராவில் உள்ள லோகேந்திர சிங்கின் அகாடமியில் கிரிக்கெட் கற்றுக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தந்தை தான் லோகேந்திர சிங். தீபக் சாஹரின் உறவினர் ராகுல் சாஹரும் இதே அகாடமியில்தான் கிரிக்கெட் பயின்றார்.
"நான் முதன்முதலில் கார்த்திக்கை, தன் தந்தை மனோஜ் சர்மாவின் தோளில் அமர்ந்தபடி, கையில் ஒரு பிளாஸ்டிக் பேட்டுடன் இருப்பதைப் பார்த்தேன். அந்த நேரத்தில், நான் சிக்ஸர் அடிக்கும் வீரராக மாற விரும்புகிறேன் என்று கார்த்திக் சொன்னார்," என நினைவு கூர்ந்தார் லோகேந்திர சிங்.
''அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட செய்தியைக் கேட்டபோது நான் அமைதியாக இருந்தேன். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் எனது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர், வீட்டில் எல்லோருக்கும் இனிப்புகளை வழங்கினர்" என லோகேந்திர சிங் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் கூறினார்
கார்த்திக் இப்போதும் தீபக் சாஹர் அவருக்குப் பரிசளித்த பேட்டைக் கொண்டுதான் விளையாடுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தீபக் சாஹர் அவருக்கு விக்கெட் கீப்பிங் கையுறைகளை வழங்கி, விக்கெட் கீப்பிங் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
கார்த்திக் ஏற்கனவே விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் கொண்டவர் என்பதால், அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டார். இப்போது அதற்கான பலனை அவர் அறுவடை செய்து வருகிறார்.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆதரவைப் பெற்ற முகுல் செளத்ரி
BBC ஐபிஎல் கோப்பை (கோப்பு படம்)
உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், முகுல் செளத்ரியை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ₹2.6 கோடிக்கு வாங்கியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அவரது அதிரடி ஆட்டத்துக்கான பலனாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மும்பைக்கு எதிராக 28 பந்துகளில் 54 ரன்களும், டெல்லிக்கு எதிராக 26 பந்துகளில் 62 ரன்களும் குவித்து, தனது ஆக்ரோஷமான ஆட்டத்திறனை அவர் நிரூபித்துக் காட்டினார்.
தேஜஸ்வியின் தாக்குதல் பாணிடெல்லியைச் சேர்ந்த வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேஜஸ்வி சிங் தஹியா. இவரது மிகப்பெரிய பலமே இவரது அதிரடியான பேட்டிங்தான்.
இதுவரை ஆறு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர், 168 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 113 ரன்கள் எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்காக ஒரு சிறந்த ஃபினிஷராக வெற்றிகரமாக செயல்பட்டதற்காக தேஜஸ்வி இந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அணிக்கும் 'ஃபினிஷர்' பாத்திரத்தை வகிக்கும் வீரர்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு