வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருந்தது. பல பிரச்சனைகள் வந்து அதையெல்லாம் பேசி தீர்த்து தற்போது ஷூட்டிங்கை துவங்கியிருக்கிறார்கள். இந்த படம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான வடசென்னை படத்தின் கிளை கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் புரமோ வீடியோவும் வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே விடுதலை, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் ‘அரசன் படத்தில் உங்களின் கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியுமா?’ என்று கேட்டதற்கு ‘ உண்மையாகவே தெரியாது.. அந்த படத்தின் கதையை எழுதும்போது ‘உங்களின் ஞாபகம் வருகிறது.. எழுதட்டுமா?’ என்று வெற்றிமாறன் என்னிடம் கேட்டார்.
‘நான் உங்களுக்கு நினைவில் வருகிறேன் என்றால் அது எனக்கு சந்தோசம்.. எழுதுங்கள்’ என்று சொன்னேன். அவர் எப்போது கூப்பிடுவாரோ அப்போது போய் நடிப்பேன்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்.. வெற்றிமாறன் சாரோடு பணிபுரிவது ஒரு சுகமான அனுபவம்.. ஏற்கனவே அவருடன் இரண்டு படங்களில் வேலை செய்திருக்கிறேன்.. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குனர். அவர் கூப்பிட்டால் வேறு எதையும் யோசிக்கவே முடியாது’ என்று பேசியிருக்கிறார்.