காதலியுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக ஊழியர் ஒருவர் கேட்ட விடுமுறைக்கு, ஒரு நிறுவனத்தின் சிஇஓ (CEO) அளித்த பதில் இப்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த ஊழியர் தனது ஈமெயிலில், “டிசம்பர் 17-ம் தேதி என் காதலி அவரது சொந்த ஊருக்குச் செல்ல உள்ளார். அவர் மீண்டும் ஜனவரி மாதம் தான் வருவார். அதனால் அவருடன் நேரத்தைச் செலவிட எனக்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும்” என வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக இது போன்ற காரணங்களுக்காக விடுமுறை கேட்க ஊழியர்கள் தயங்கும் நிலையில், இந்த ஊழியரின் நேர்மையைக் கண்டு வியந்த அந்த சிஇஓ, “காதலுக்கு No சொல்ல முடியுமா? தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்” என நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். இந்த ஈமெயில் உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊழியரின் உண்மையான காரணத்தையும், ஒரு சிஇஓ-வின் பெருந்தன்மையான அணுகுமுறையையும் நெட்டிசன்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.