மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் உள்ள பாராசியா சிவில் மருத்துவமனையில், கழிப்பறை காம்மோடிற்குள் பிறந்த பெண் குழந்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிப்பறையில் தண்ணீர் சரியாகச் செல்லாததைக் கவனித்த பெண் ஊழியர் ஒருவர் சோதித்தபோது, கம்மோடிற்குள் குழந்தையின் தலை மற்றும் கை இருப்பதைக் கண்டு அதிர்ந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
பின்னர் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் கழிப்பறை உடைக்கப்பட்டு, திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
புறநோயாளிகள் பிரிவிற்கு (OPD) வந்த ஒரு கர்ப்பிணிப் பெண், கழிப்பறையிலேயே பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்காக மருத்துவமனையில் உள்ள 26 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவிலேயே குழந்தை கைவிடப்படும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2023-ல் மட்டும் அந்த மாநிலத்தில் 140 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட சமூக அழுத்தம் காரணமாக இந்தச் செயல் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.