நாகாலாந்து மாநிலம் தீமாப்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் 65 வயது முதியவர் ஒருவர் தனது மஹிந்திரா தார் காரைச் செலுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11:35 மணியளவில், தீமாப்பூர் சிக்னல் அங்காமி பகுதியைச் சேர்ந்த தெப்ஃபுநீதுவோ என்பவர், தனது காரை சட்டவிரோதமாக ரயில்வே தண்டவாளத்திற்குள் ஓட்டிச் சென்றுள்ளார்.
பழைய மேம்பாலப் பகுதியில் சென்றபோது காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவானது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள், காரைப் பாதுகாப்பாக மீட்டதோடு, கவனக்குறைவாகச் செயல்பட்ட முதியவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தார் கார் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற செயல்கள் குறித்து இணையவாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரயில்வே சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.