கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் என்றாலே அலங்கரிக்கப்பட்ட யானைகள், நெற்றிப் பட்டம், எழுந்தருளிப்பு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வரும். குறிப்பாக திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவில், கோவில் முன்பு இருபுறமும் தலா 15 யானைகள் அணிவகுத்து நிற்கும் குடை மாற்றும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கூடுகின்றனர்.
இந்த நிலையில், திருவிழா மேடை அல்ல… பள்ளி வளாகத்தில் யானை ஒன்று தோன்றியது அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.எர்ணாகுளம் அருகே கரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘பெட் ஷோ’ எனப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை கொண்டு வந்து காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, பலர் பூனை, நாய், குதிரை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை அழைத்து வந்தனர்.
ஆனால், அப்போது மாணவி ஒருவர் யானையை அழைத்து வந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. செல்லப் பிராணிகள் வரிசையில் மிகப் பெரிய விலங்காக கம்பீரமாக நின்ற யானையை பார்த்த பள்ளி நிர்வாகமும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அதே நேரத்தில், அந்த மாணவி யானையை அங்கிருந்தவர்களுக்கு காண்பித்ததாகவும், சிலர் யானை மீது ஏறி அமர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.யானையின் முன்பு நின்று பலர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது.
இந்த விவகாரம் வனத்துறையினரின் கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து, எடப்பள்ளி வனச்சரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர். உரிய அனுமதி பெற்று யானை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதா? யானை மீது ஏறி அமர அனுமதி வழங்கப்பட்டதா? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், தேவையான அனுமதிகளுடன் தான் யானை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், யானை மீது ஏறி அமர்ந்தவர்கள் மாணவிகள் அல்ல; யானையின் உரிமையாளர்களே எனவும் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து எழுத்து மூலமாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், பள்ளி வளாகத்தில் யானை தோன்றிய இந்த அபூர்வ சம்பவம், கேரளா முழுவதும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.