ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்களுக்கான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஏடிஎம் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறையின் மூலம், EPFO உறுப்பினர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து நேரடியாக ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக பணம் எடுக்க முடியும். இதனால், நீண்ட நடைமுறைகள், சரிபார்ப்பு தாமதங்கள் போன்ற சிக்கல்கள் குறைந்து, நிதியை எளிதாகவும் விரைவாகவும் அணுகும் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், வருங்கால வைப்பு நிதி ஊழியர்களுக்குச் சொந்தமானது என்பதையும், அதை அணுகுவதில் உள்ள நடைமுறைத் தடைகளை அகற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த புதிய ஏடிஎம் மற்றும் யுபிஐ அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை, 2026 மார்ச் மாதத்திற்கு முன்னதாக அமலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது EPFO உறுப்பினர்கள், பணம் திரும்பப் பெற ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குப் பிறகு நிர்வாகச் செயல்முறைகள் முடிந்து பணம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. புதிய முறையில், இந்தக் காத்திருப்பு நேரம் பெரிதும் குறையும். EPFO கணக்குகள் ஏற்கனவே ஆதார் மற்றும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு அமைப்புகளில் பிரத்யேக வைப்பு நிதி அம்சத்தை சேர்க்க இது உதவும்.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் தெரிவிக்காமல், வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் வரை முன்பணம் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார். இதற்கிடையே, மத்திய அறங்காவலர் குழு (CBT) கடந்த அக்டோபர் 2025 கூட்டத்தில், EPF திரும்பப் பெறுதல் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதில், 75% வரை பகுதி பணம் எடுக்கும் அனுமதி, முன்பணம் பெற குறைந்தபட்ச சேவை காலத்தை ஒரு ஆண்டாக குறைத்தல் மற்றும் முழுமையான பணம் எடுப்பதற்கு 12 மாத காத்திருப்பு காலம் நிர்ணயித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதனுடன், மத்திய அரசு ‘ஊழியர் சேர்க்கை திட்டம் 2025’ என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 2025 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம், நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை EPFO-வில் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. முன்பு பிடித்தம் செய்யப்படாத பங்களிப்புத் தொகைக்கு நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை என்றும், வெறும் ரூ.100 அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வேலைவாய்ப்பு முறைப்படுத்தலை மேம்படுத்துவதோடு, தொழில் செய்வதை எளிதாக்கும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.