தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம், திட்டப் பணிகளை சீர்குலைத்தும், நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்தும், மாநிலங்களின் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்தியும், வேலைநாட்கள் மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை வெட்டியும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
மேலும், “கிராமங்களே நமது நாட்டின் முதுகெலும்பு” எனக் கூறிய அண்ணல் மகாத்மா காந்தியின் பெயரை இந்தச் சட்டத்திலிருந்து நீக்க முயல்வதும், இந்தித் திணிப்பை திணிக்க முயல்வதும், இறுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தையே இல்லாமல் செய்யும் ஆபத்தான சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு ஒத்து ஊதியும், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.வையும் கடுமையாகக் கண்டித்தும், இந்த சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 24.12.2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் பயன்பெறும் மக்களை திரட்டி, ஒரே நேரத்தில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, பாசிச நடவடிக்கைகளுக்கும், அதற்கு துணை நிற்கும் அ.தி.மு.க.வுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி, இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கழகச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது.