சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,284 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் என மொத்தம் 3,62,429 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
வரைவு வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் Voters.ec.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.