ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
Top Tamil News December 20, 2025 08:48 AM

கும்பகோணத்தில் 54.86 ஏக்கரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்கலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அந்த சட்ட மசோதாவை ஜனாதிபதி முர்முவின் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இப்பல்கலையின் வேந்தராக, முதல்வர் இருப்பார். இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார். வேந்தரின் அனுமதியின்றி கவுரவ பட்டங்களை வழங்க முடியாது. பல்கலைக்கு மத்திய, மாநில அரசுகள் வாயிலாகவும், பல்கலை மானியக்குழு வாயிலாகவும் நிதி வழங்கப்படும். கட்டணம், மானியம், நன்கொடை, பரிசுகள் வாயிலாக, நிதி ஆதாரங்களை பெறலாம் என சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் கவர்னர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. தொடர்ந்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில், கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் மனு அளித்து உள்ளனர். கலைஞர் பல்கலை. மசோதா, விளையாட்டு பல்கலை. மசோதா தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் 'இண்டியா' கூட்டணி எம்.பி.கள் நேரில் வழங்கினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.