திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, “ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது அரசு திட்டங்களால் பயனடைந்திருக்கிறார்” என்ற நிலையை உருவாக்கியுள்ளார் தமிழக முதல்வர்.
அந்த ஆட்சியின் வலிமையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என்றார்.தமிழக முதல்வர் சாதனை புரிந்து வருவதாக திமுக மட்டுமே சொல்லவில்லை என்றும், அதை மத்திய அரசே புள்ளிவிவரங்களுடன் உறுதிப்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சி மாற்றங்களை தீர்மானிப்பதில் பெண்களின் மனநிலையும், ஆதிதிராவிட சமூகத்தின் மனநிலையும் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதை தொன்றுதொட்டு பார்த்து வருகிறோம் என்றார்.இன்றைய சூழலில், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் மனதில் முதல்வர் ஆழமாக இடம்பிடித்துள்ளார் என்றும் கூறினார்.
சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்கும் நோக்கில், “காலனி” என்ற சொல்லையே அரசு பதிவுகளில் இருந்து நீக்கி அரசாணை பிறப்பித்த முதல்வரின் ஆட்சியை மீண்டும் அமைக்க அயராது உழைப்போம் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளில் செயல்பட்டது போலவே, யார் நீக்கப்பட்டனர், ஏன் நீக்கப்பட்டனர் என்பதற்கான முழு விவரங்களையும் சேகரித்து, தகுதியுள்ள அனைவரையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என கூறியது குறித்து பேசுகையில், “அது எனக்கு வருத்தமளிக்கிறது” என்ற அமைச்சர்,2017–18ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் பள்ளி இடைநிற்றல் 16 சதவீதமாக இருந்தது என்றும், தற்போது அது 7.7 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் விளக்கினார்.
இந்த தகவல் நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது என்றும், “பழைய தகவல்களை வைத்து திமுக அரசை விமர்சிப்பதைவிட, விஜய் தன்னை புதுப்பித்து கொள்ள வேண்டும்” என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.