கனவு திட்டமான ககன்யானின் பாராசூட் சோதனையை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ..!
Seithipunal Tamil December 21, 2025 11:48 AM

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்திற்கு இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 04 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ககன்யான் மனித விண்வெளி திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சோதனைகளை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்த ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் நோக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, மனித விண்வெளிப் பயணத்திற்கு பாராசூட் அமைப்பைத் தகுதி பெறச் செய்வதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த சோதனைகள் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், டிஆர்டிஓ மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.