நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவியும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளுமான ஆர்த்தி ரவி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் செய்திகளில் இடம்பிடித்து வரும் அவர், அதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில், தனது இரண்டு மகன்களுடனும் செல்லப்பிராணி நாய் குட்டியுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆர்த்தி ரவி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களுடன் அவர் எழுதியுள்ள கேப்ஷன், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவமாக இருந்தாலும், பல பெண்களுக்கு தேவையான அறிவுரையாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த பதிவில், பல பெண்கள் தங்கள் கனவுகளை நடுவே கைவிட்டு விடுவதையும், வேலைகளை நிறுத்தி விட்டு பிற விருப்பங்களில் மட்டும் கவனம் செலுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுவும் செய்யாமல் வீட்டில் இருப்பதை தியாகமாக சமூகமே போற்றுகிறது என்றும், அதனைப் பார்த்து கை தட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனதிற்கு சரி என்று தோன்றினால் காதலுக்காக சமரசங்கள் செய்யலாம். ஆனால் அதற்கு முன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்றும், வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதையும் அவர் அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்த்தி ரவியின் இந்த பதிவு பல பெண்களின் வாழ்க்கையோடு ஒத்துப் போகும் வகையில் இருப்பதாகவும், நேர்மையான சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.