தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் சேர மறுத்து போராடி வரும் பணியாளர்கள், பல மாதங்களாக வருமானம் இன்றி கடும் பொருளாதார சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக, கடந்த 5 மாதங்களாக வேலை மற்றும் ஊதியம் இன்றி தவித்து வந்த தூய்மைப் பணியாளர் டி.ரவிக்குமார், மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை இழப்பு மற்றும் வாழ்வாதார நெருக்கடி காரணமாக ஒரு பணியாளர் உயிரிழந்தது, சமூகத்தில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், மிகுந்த மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஆளும் அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது. தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது. தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது” என கடுமையாக சாடியுள்ளார்.