2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, துணைக்கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்சர் பட்டேல் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அனைவரையும் விட விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டிருப்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 2019-ல் அம்பத்தி ராயுடு நீக்கப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நீக்கம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “நான் என்ன தப்பு செய்தேன் என்று ஜிதேஷ் சர்மா நிச்சயம் யோசிப்பார்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் இந்த உலகக்கோப்பையில், இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவையும், பிப்ரவரி 15-ல் பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.