ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், 21 வயது இளைஞர் ஒருவரின் உடல் அவரது பெண் தோழியின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அசோக் தாஸுக்கும், அண்மையில் திருமணமான அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அந்தப் பெண்ணைச் சந்திக்க அசோக் சென்றபோது, பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அசோக்கின் தந்தை கூறுகையில், தனது மகனை விடுவிக்க பெண்ணின் குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், மறுநாள் காலையில் அவர் மகனைப் பார்க்கச் சென்றபோது அசோக் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்று அசோக்கின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணின் குடும்பத்தினரைத் தேடி வரும் போலீசார், இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.