சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில், பெண் ஊழியர்கள் மீது ரசாயனத்தை தெளித்துவிட்டு 50,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்தாரா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையத்தில், ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது இந்த துணிகரச் செயல் அரங்கேறியுள்ளது.
மேலும் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த இரண்டு பெண் ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர் மீது மிளகுத் தூள் கலந்த ரசாயனத்தை திடீரெனத் தெளித்து நிலைகுலையச் செய்துள்ளனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறிய இடைவெளியைப் பயன்படுத்தி, மேசையிலிருந்த 50,000 ரூபாயைச் சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
“>
இந்தச் சம்பவம் முழுவதுமே ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசாயனத் தாக்குதலுக்குள்ளான ஊழியர்களில் ஒருவர் பயத்தில் மையத்தை விட்டு வெளியே ஓடுவதும், கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.