கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் ஒரு மனிதன் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்குச் சிறந்த உதாரணம் சத்யநாராயண் நுவால். ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், வறுமை காரணமாக 10-ஆம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.
19 வயதிலேயே திருமணமானதால் குடும்பச் சுமை அதிகரித்தது. பிழைப்பு தேடி வீட்டை விட்டு வெளியேறிய இவரிடம் தங்குவதற்குக்கூடப் பணம் இல்லை.
இதனால் பல இரவுகளை ரயில்வே ஸ்டேஷன்களில் கழித்துள்ளார். பேனா மை தயாரிப்பது, போக்குவரத்துத் தொழில் எனப் பல சிறு தொழில்களைச் செய்து பார்த்தும் அவருக்கு ஆரம்பத்தில் தோல்வியே மிஞ்சியது.
மகாராஷ்டிராவில் அப்துல் சத்தார் என்பவரைச் சந்தித்தது நுவாலின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இருந்த வெடிமருந்து கிடங்கை வாடகைக்கு எடுத்துத் தனது பயணத்தைத் தொடங்கிய நுவால், நிலக்கரி சுரங்கங்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்ய ஆரம்பித்தார்.
1995-ல் தனது சொந்த நிறுவனமான ‘சோலார் இண்டஸ்ட்ரீஸ்’ (Solar Industries) தொடங்கினார். இன்று இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் உரிமம் பெற்ற முதல் தனியார் நிறுவனம் இதுதான்.
73 வயதாகும் இவரது சொத்து மதிப்பு இன்று ₹46,500 கோடிக்கும் அதிகம். ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருந்த ஒரு சாமானியன், இன்று 65 நாடுகளுக்குத் தனது தொழிலை விரிவுபடுத்தி உலகமே வியக்கும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.