சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பம்சமாக, மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் திடீரென கபடி களத்தில் இறங்கினார்.
அவரே நேரிடையாக வீராங்கனைகளுடன் கபடி விளையாடி, தனது சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் பிரதிநிதி ஒருவர் விளையாட்டு உடையில் இல்லாமல், சாதாரண உடையிலேயே களத்தில் இறங்கி வீரமாக விளையாடியதைக் கண்ட தொண்டர்களும் பொதுமக்களும் பலத்த கைதட்டல்களை எழுப்பினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன், விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் அவரது எளிமையான அணுகுமுறையை பலரும் பாராட்டி வருகின்றனர்.