வாகன நம்பர் பிளேட்டுகளை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் கண்டு, ஃபாஸ்டேக் வழியாக தானாகவே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை முற்றிலும் பூஜ்ஜியமாகக் குறைப்பதே அரசின் முக்கிய இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்களை முழுமையாக நீக்கும் வகையில் “மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ” (MLFF – Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய முறையில், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் எந்தவித தாமதமும் இன்றி நேரடியாகச் செல்ல முடியும். 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஜிபிஎஸ் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இந்த சுங்க வசூல் முறை முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறையுடன், AI அடிப்படையிலான தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும்.
முன்னதாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்ட நிலையில், ஃபாஸ்டேக் அறிமுகத்திற்கு பிறகு அந்த நேரம் சுமார் 60 விநாடிகளாகக் குறைந்தது. இப்போது, காத்திருப்பு நேரத்தை முழுமையாக நீக்குவதே அரசின் நோக்கம். MLFF தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால், வாகனங்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் கூட சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும்.
இந்த புதிய அமைப்பு செயல்படுத்தப்பட்டால், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் முற்றிலும் நீங்கும். பயணிகளின் நேரமும் எரிபொருளும் பெரிதும் சேமிக்கப்படும். ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருள் சேமிக்கப்படும் என்றும், அரசின் சுங்க வருவாய் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வரை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஃபாஸ்டேக் அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் வருவாய் ஏற்கனவே ரூ.5,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், புதிய தொழில்நுட்பம் வந்தால் சுங்கக் கட்டண ஏய்ப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கே மத்திய அரசு பொறுப்பு என்றும், மாநில மற்றும் நகர சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
சுங்கச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய ஒப்பந்தக்காரர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்டு புதிய டெண்டர்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். தற்போது சில இடங்களில் இந்த தொழில்நுட்பம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க வசூல் முறையை எளிதாகவும், வெளிப்படையாகவும், பயணிகளுக்கு முழுமையான வசதியுடனும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என நிதின் கட்கரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.