திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்
Vikatan December 23, 2025 12:48 AM

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இளையராஜாவின் தம்பி இசைமேகம் (28). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்றிரவு இசைமேகத்துக்கும் அவரின் அண்ணி சாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இசைமேகம், காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து அண்ணி சாந்தியை சரமாரியாக வெட்டினார். சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் இசைமேகம் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.

கைது

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சாந்தியை மீட்டவர்கள் பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் சாந்தி, வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேள்விபட்டதும் சாந்தியின் கணவர் இளையராஜா கதறி துடித்தார். ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மப்பேடு காவல் நிலையத்துக்கு சாந்தி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மப்பேடு போலீஸார், சாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த இசைமேகம், மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ``

இதுகுறித்து மப்பேடு போலீஸார் கூறுகையில், ``அண்ணன் தம்பிகளான இளையராஜாவும் இசைமேகமும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். அதனால் இளையராஜாவின் மனைவி சாந்திக்கும் இசைமேகத்தின் மனைவிக்கும் இடையே வீட்டு வேலைகளை செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று இளையராஜா வீட்டில் இல்லை. மதுபோதையில் இசைமேகம் வீட்டிலிருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சாந்திக்கும் இசைமேகத்தின் மனைவிக்கும் இடையே வீட்டு வேலை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது இசைமேகத்தின் மனைவியை சாந்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதைக்கேட்டதும் போதையிலிருந்த இசைமேகம், மனைவிக்கு ஆதரவாக அண்ணி சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாடு அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இசைமேகத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.