மதக்கலவரம் வரவேண்டும், அதை வைத்து அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமா? திமுகவிற்கு பாஜக நயினார் கேள்வி!
Seithipunal Tamil December 23, 2025 01:48 AM

 ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ள திமுக அரசின் இந்துமத வெறுப்பு கடும் கண்டனத்திற்குரியது. இந்துக்களின் நம்பிக்கைகள் என்பதையும் தாண்டி தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளைத் திமுக அரசு திட்டமிட்டு பறித்துள்ளதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

மத்திய பாதுகாப்புப் படையினருடன் குறிப்பிட்ட சிலர் மட்டும் மலைமீது சென்று தீபமேற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும் என மிகைப்படுத்தி நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை உத்தரவு பிறப்பித்த திமுகவின் ஏவல்துறை, நேற்று இரவோடு இரவாகத் திருப்பரங்குன்ற மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காகக் கொடியேற்றுவதற்கு மட்டும் எப்படி பாதுகாப்பு அளித்தது? வாக்கு வங்கிக்காகத் திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில் அரசு அதிகாரிகளும் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா?

இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களின் விழாக்களைக் கொண்டாடுவதில் இந்துக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, இந்துக்கள் திருப்பரங்குன்ற மலைமீது தீபமேற்றுவதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. ஆனால், திருவிழாவில் கைகலப்பு ஏற்பட்டால் திருடனுக்குக் கொண்டாட்டம் என்பது போல அமைதியாக நடக்க வேண்டிய அவரவர் மத விழாக்களில் திமுக எதற்கு உள்ளே புகுந்து குட்டையைக் குழப்புகிறது? சகோதரத்துவத்துடன் பழகிவரும் இரு சமூகத்தினரிடையே எப்படியாவது மதக்கலவரம் வரவேண்டும், அதை வைத்து அடுத்த முறை அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.,

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.