தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டதாக கருதியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய தலைமை அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதை காட்டியுள்ளது. அண்ணாமலை வெறும் ஓய்வில் இல்லை, மாறாக 2026 தேர்தலுக்கான ஒரு 'பிரச்சார பீரங்கியாக' மீண்டும் களமிறக்கப்படுவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
சமீபத்திய டெல்லி பயணங்கள் மூலம், தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, டிடிவி தினகரன் போன்ற செல்வாக்குள்ள தலைவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டாலும், அண்ணாமலை ஒரு நட்சத்திர பேச்சாளராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது கட்சிக்கு இரட்டை பலத்தைத் தரும் எனத் தலைமை நம்புகிறது.
ஒரு கட்சியில் பல ஆளுமைகள் இருப்பதும், அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டுவதும் கூட்டணிக்கு வலு சேர்க்குமே தவிர, அது உட்கட்சி விரிசலை ஏற்படுத்தாது என்பதற்கு அண்ணாமலையின் தற்போதைய நகர்வுகள் சான்றாக உள்ளன.
அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களிடையே அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கை சரியாக பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு ஒரு கடுமையான சவாலை அண்ணாமலை தரப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva