திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்.. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வை நடத்துவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.
ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார். கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.