புது டெல்லி,: நாடு முழுவதும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெரும் மாற்றங்களைச் செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். ‘விக்ஷித் பாரத் – கியாரண்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் – கிராமின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, இனி வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
‘ஜி ராம் ஜி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இத்திட்டம், கிராமப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு, 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கிய முக்கிய மைல்கல்லாக அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாறியது நிதிப் பங்கீடு: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், திட்டத்தின் நிதி ஆதாரத்திலும் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை ஊதியச் செலவினங்கள் முழுவதையும் மத்திய அரசே ஏற்று வந்த நிலையில், புதிய சட்டத்தின்படி நிதிப் பங்கீடு மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே 60:40 என்ற விகிதத்தில் அமையும். இதன் மூலம் மாநில அரசுகளின் நிதிச் சுமை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
எனினும், விவசாயப் பணிகளின்போது தொழிலாளர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ஆண்டுக்கு 60 நாட்கள் வரை இத்திட்டத்தின் பணிகளுக்கு இடைவேளை விடுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலைத் தொடர்ந்து, இப்புதிய சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.