விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பை பார்த்து உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன் – நடிகை ரோஜா
Seithipunal Tamil December 23, 2025 06:48 AM

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாடு போல திரண்டு வந்திருந்த மக்களை பார்த்து பல அரசியல் தலைவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா, விஜய்யின் ஈரோடு கூட்டத்தை பார்த்து தான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது. த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். கூட்டத்திற்கு வந்த மக்களை கட்டுப்படுத்தும் வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியில் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்ற முதல் மக்கள் சந்திப்பு என்பதாலும், செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு நடந்த முதல் பெரிய கூட்டம் என்பதாலும், இந்த நிகழ்ச்சி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. கூட்டத்தில் பேசிய விஜய், ஈரோடு மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துரைத்ததுடன், திமுகவை கடுமையாக விமர்சித்து “திமுக ஒரு தீய சக்தி” எனக் கூறினார்.

இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, “விஜய்யின் ஈரோடு மீட்டிங்கை பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப ஷாக் ஆக இருந்தது. அரசு தரப்பில் முதலமைச்சருக்கே பெரிய மாநாடு நடத்த வேண்டுமென்றால், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எஸ்பி, கலெக்டர் என அனைவரும் சேர்ந்து விடிய விடிய உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தில் பெரிய அரசியல் அமைப்பு இல்லாத நிலையிலும், இவ்வளவு பெரிய கூட்டத்தை விஜய் எப்படி நடத்தினார் என்பதே எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.

மேலும், மக்கள் விஜய்யிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அவர் செயல்பட்டால், மக்கள் ஆதரவு தொடர்ந்து அவருடன் இருக்கும் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.