சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, சுவாமிக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி ஊர்வலம் நாளை அதாவது டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை பத்தனம்திட்டா ஆறன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது.
நவம்பர் 16 முதல் நடைபெற்று வரும் மண்டல கால பூஜைகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் 27 அன்று காலை 10:10 மணி முதல் 11:30 மணிக்குள் மண்டல பூஜை நடைபெறும் என்று கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தெரிவித்துள்ளார்.
நாளை காலை 5 மணி முதல் 7 மணி வரை ஆறன்முளா கோயிலில் பக்தர்கள் தங்க அங்கியைத் தரிசிக்கலாம். அதன் பின்னர் மேளதாளங்களுடன் புறப்படும் இந்த ஊர்வலம், பல்வேறு இடங்களைக் கடந்து டிசம்பர் 26 அன்று மாலையில் சபரிமலையைச் சென்றடையும்.
தங்க அங்கி அணிவிக்கப்பட்ட பிறகு ஐயப்பனுக்கு சிறப்புத் தீபாராதனை காட்டப்படும். மண்டல பூஜை நிறைவடைந்ததும் டிசம்பர் 27 இரவு நடை சாத்தப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 அன்று நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran