உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் உள்ள காவல் நிலையத்தில், நியாயம் கேட்க வந்த ஒரு நபரை காவல் ஆய்வாளர் (Inspector) லக்ஷ்மிகாந்த் மிஸ்ரா மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை “அந்த ம***யை இங்கே கூப்பிடு” என்று ஆபாசமாகத் திட்டியதுடன், “அவனை ஆயிரம் செருப்பால் அடிப்பேன்” என்றும், அவர் மீதே வழக்கு (FIR) பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு காவல் நிலையத்திற்குள் புகலிடம் தேடி வருபவர்களைச் சட்ட ரீதியாக அணுகாமல், ஒரு ரவுடியைப் போல ஆய்வாளர் நடந்துகொண்ட விதம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அராஜகத்தின் வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “காவல் நிலையங்கள் குற்றவாளிகளைத் தடுக்கும் இடமா அல்லது குற்றவாளிகளைப் போல காவலர்களே நடந்துகொள்ளும் இடமா?” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு உயர் அதிகாரி, அதிகாரத் திமிரில் ஒரு சாமானிய மனிதனை மிரட்டுவது காவல் துறையின் மாண்பையே குலைப்பதாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.