கண்துடைப்பு நாடகமா..? செவிலியர்களுக்கு செவிசாயுங்கள் முதல்வர் அவர்களே..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
Seithipunal Tamil December 23, 2025 10:48 AM

சென்னையில் கடந்த, 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும், செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செவி சாய்க்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

''செவிலியர்களுக்கு செவிசாயுங்கள் முதல்வர் அவர்களே! கடந்த 18-ஆம் தேதியிலிருந்து 8,000-த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டி இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.

செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “தற்போது பணியிடங்கள் எதுவும் காலி இல்லை. கலைந்து செல்லச் சொல்லுங்கள்” என்று மிரட்டியிருந்த நிலையில் தற்போது அவர்களில் 724 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றுரைத்துள்ளார். 

எட்டாயிரம் பேருக்கு மேல் பணி நிரந்தரத்திற்காகத் தவமிருக்கும் நிலையில் அவர்களில் 724 செவிலியர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் கூறுகிறது, திமுக அரசு? இது பிரித்தாளும் சூழ்ச்சியா அல்லது ‘பிரச்சினைக்கு நாங்களும் ஏதோ செய்துவிட்டோம்’ எனும் கண்துடைப்பு நாடகமா?

வாக்குறுதி என் 356-இல் கூறியது படி, பணி நிரந்தரம் கேட்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அன்னையருக்கு நிகரான அவர்களையும் வஞ்சித்து அவர்கள் வயிற்றிலடிக்க வேண்டாம் என முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என செவிலியர்கள் நடத்தி வருகின்றனர்.

குறித்த போராட்டம் நீடித்து வரும் நிலையில் அவர்களுடன் சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போது '750 நர்சுகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும்' என்று உறுதி அளித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.