IPL 2026: புதிய கேப்டனை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்..? அக்சர் படேல் கேப்டன்ஷிக்கு ஆபத்தா?
TV9 Tamil News December 23, 2025 09:48 AM

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் மிகப்பெரிய மாற்றம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, நட்சத்திர ஆல்ரவுண்டரும், இந்திய டி20 அணியின் துணை கேப்டனுமான அக்சர் படேலை (Axar Patel) கேப்டன் பதவியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் நீக்கவுள்ளதாக தெரிகிறது. கடந்த ஐபிஎல் 2025 சீசனில் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால், வருகின்ற 2026 ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக ஒரு வீரராக மட்டுமே இருப்பார் என்றும், அவருக்குப் பதிலாக அணியின் தலைமைப் பொறுப்பை அனுபவ வீரருக்கு கொடுப்பது குறித்தும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மாற்றமா..?

ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசன் வரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு ஏலத்தின் மூலம் ரிஷப் பண்ட் சென்றதால், ஐபிஎல் 2025 சீசனில் டெல்லி அணியை அக்சர் படேல் வழிநடத்தினார். இவரது தலைமையில் டெல்லி அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 2025 சீசனில் 5வது இடத்தை பிடித்தது. இருப்பினும், பிளேஆஃப் சுற்றுக்குள் டெல்லி அணி செல்ல தவறியது நிர்வாகத்தை ஒரு புதிய திசையை பரிசீலிக்கத் தூண்டியுள்ளது. அக்சர் அணியின் மிகவும் நம்பகமான வீரராக என்பதால், வீரராக விளையாட வைத்து, கேப்டன் பதவியை வேறொருவருக்கு கொடுக்கலாம்.

யார் அந்த அனுபவ வீரர்..?

Breaking News :

Delhi Capitals Has Sacked Axar Patel & KL Rahul Is Likely To Be Their New Captain. pic.twitter.com/Pb13V7Fonw

— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola)


டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரராக கே.எல்.ராகுல் உள்ளார். இவருக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு கேப்டன்சி செய்த அனுபவமும் உள்ளது. கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிப்பதன் மூலம் அணியில் புதிய ஆற்றலை செலுத்த அந்த அணி நிர்வாகம் விரும்புகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், கே.எல். ராகுலின் பெயர் முன்னணியில் உள்ளது. இரு வீரர்களின் சம்பளத்திற்கும் இடையே ரூ. 2.5 கோடி வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2025க்கு முன்பு டெல்லி அணி அக்சர் படேலை ரூ. 16.50 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில், கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு வாங்கியது.

இந்திய அணியில் அக்சர் படேலுக்கு முக்கிய பதவி:

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அக்சர் படேல் கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை என்றாலும், சமீபத்தில் அவருக்கு இந்திய அணியில் முக்கிய பதவி கிடைத்துள்ளது. 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு அக்சர் படேலை துணை கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது. அவரது நிலையான ஃபார்மைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பார்ம் அவுட்டில் தவித்து வந்த சுப்மன் கில்லுக்குப் பதிலாக அக்சர் படேலுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.