பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமர் சிங் சாஹல், பாட்டியாலாவில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த மாநில காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து 16 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆன்லைன் மோசடி காரணமாக தான் மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாட்டியாலா மூத்த காவல்துறை அதிகாரி வருண் சர்மா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
குறிப்பிடத்தக்க விஷயமாக, 2015-ஆம் ஆண்டு நடந்த பரீத்கோட் துப்பாக்கிச் சூடு வழக்கில் அமர் சிங் சாஹல் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 2023-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சுக்பீர் சிங் பாதலுடன் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. நிதி இழப்பு மற்றும் வழக்குச்சுமைகளால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Edited by Siva