நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த சந்திப்பின்போது புத்தகம் படிப்பது குறித்த உரையாடல் நடந்ததாகவும், 10 பக்கம் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த காலகட்டத்தில், “தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்” என்று கூறி அவரை முதல் ஆளாக கடுமையாக எதிர்த்தவர் சீமான். ஆனால் அரசியல் பாதையில் இருந்து ரஜினிகாந்த் விலகிய பிறகு, இருவருக்கும் இடையே மரியாதை சார்ந்த நட்பு நிலவுகிறது. அவ்வப்போது சீமான், ரஜினிகாந்தை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத சீமான், தற்போது அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த், “எப்போது படிக்கிறீர்கள்?” என்று கேட்டதாகவும், அதற்கு தனது தினசரி பழக்கத்தை விளக்கியதாகவும் சீமான் கூறினார். இரவு 11 மணிக்கு தூங்கிவிட்டால், அதிகாலை 2 மணிக்கு விழித்து 4 மணி வரை படிப்பதாகவும், அதன் பின்னர் காலை உடற்பயிற்சிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நாட்களில் தூக்கம் வரவில்லை என்றால், காலை 4 மணிக்கே எழுந்து படித்துவிட்டு நேரடியாக பயிற்சிக்கு செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ரஜினிகாந்த், “அது சரியான நேரம்” என்று பாராட்டியதாக சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த், “நான் 10 பக்கம் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது” என்று கூறியதாகவும், அதற்கு சீமான் “அது நல்லதுதான்; மாணவர்கள் படிக்க வேண்டும், அப்போதுதான் அறிவு வளர்கிறது” என்று பதிலளித்ததாகவும் கூறினார்.
சீமான் பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தி வருகிறது.