கேரளாவில் உள்ள சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக (Communal Laboratories) மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளார். “ஜாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றாகக் கல்வி கற்கும் புனிதமான இடம்தான் பள்ளி; அங்கே பிரிவினைவாத விதைகளை விதைக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசு வேடிக்கை பார்க்காது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளா எப்போதும் ஜனநாயக உணர்வும், மதநல்லிணக்கமும் மிக்க மாநிலம் என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், கல்வி நிறுவனங்களில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். குழந்தைகளின் மனதில் மத ரீதியான பாகுபாடுகளைத் திணிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் தனது பேச்சின் மூலம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.