ஜார்கண்ட் மாநிலம் கிரீடி மாவட்டத்தில், பாலியல் சீண்டலை எதிர்த்த பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
காடி கிராமத்தை சேர்ந்த அந்த பெண், மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் குடும்பத்தைக் காக்க ஒரு சிறிய துரித உணவகத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவரது கடைக்கு வந்த சில இளைஞர்கள், அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டனர். இதனை அவர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ஒருவன், சமோசா பொரிக்க பயன்படுத்தும் கொதிக்கும் எண்ணெயை அவர் மீது ஊற்றினான். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த பெண், தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், உதய் சவுத்ரி என்பவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மனிஷ் சவுத்ரியை தீவிரமாக தேடி வருகின்றனர். உழைக்கும் பெண் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Edited by Siva