துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் ஆலோசகராக (Mentor) இருந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமதுவின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் எனப் பாராட்டுகள் குவிகின்றன.
போட்டி முடிந்ததும் உற்சாகமடைந்த ரசிகர் ஒருவர், சர்பராஸ் அகமதுவைக் கட்டிப்பிடித்து, “சர்பராஸ் எப்போதுமே ஏமாற்ற மாட்டார்” எனப் புகழ்ந்து தள்ளினார்.
மேலும், 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2004 19-வயது உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராகச் சர்பராஸ் பெற்ற வெற்றிகளைப் போலவே இதுவும் அமைந்திருப்பதாகக் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் சீனியர் அணி தொடர்ந்து இந்தியாவிடம் தோற்று வரும் நிலையில், ஜூனியர் அணியின் இந்த மாபெரும் வெற்றி அந்நாட்டு ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் 19-வயது ஆசியக் கோப்பையை வென்றுள்ளதால், வரும் 2026 டி20 உலகக்கோப்பைக்குச் சர்பராஸ் அகமதுவை சீனியர் அணியின் ஆலோசகராக நியமிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“இளம் வீரர்களுக்குப் போராடும் குணத்தையும், தன்னம்பிக்கையையும் மட்டுமே நான் கொடுத்தேன்; மீதி அவர்கள் உழைப்பு” எனச் சர்பராஸ் அடக்கமாகத் தெரிவித்துள்ளார்.