தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக வலம் வருபவர் பாலையா என்கிற பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் என்றாலே அதிரடியான ஆக்சன் காட்சிகளும் பன்ச் வசனங்களும் அனல் தெறிக்கும். இவரின் படத்திற்காகவே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
பாலையாவின் திரைப்படங்கள் ஆந்திராவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி வருகிறது. அப்படி அவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் அகாண்டா.
போயாப்பட்டி சீனு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அகோரி சாமியாகவும் வில்லன்களை புரட்டி எடுக்கும் ஆகாச சூரனாகவும் அசத்தியிருந்தார் பாலையா. முதல் பாகம் வெற்றியடையவே அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கினார்கள். இந்த திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
ஆனால், இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. முதல் பாகம் போல இரண்டாம் பாகம் இல்லை.. படம் முழுக்க பாலையா பேசிக்கொண்டே இருக்கிறார். இடைவேளை ஆக்சன் காட்சி மற்றும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு ஆக்சன் காட்சி மட்டுமே நன்றாக இருக்கிறது. மற்றபடி படம் முழுக்க ஆன்மீகம் பற்றி போதித்து கொண்டே இருக்கிறார் பாலையா.. வில்லனாக வரும் ஆதியையும் வீக்காக காட்டி இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனம் செய்தார்கள்.
எனவே, இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் இந்தியாவில் இதுவரை 100 கோடியை வசூலை கூட வசூல் செய்யவில்லை. இந்த படம் கடந்த 10 நாட்களில் 84 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் தியேட்டர் வசூல் மூலமாக மட்டுமே 100 கோடி ஷேர் வரவேண்டும். ஆனால் இதுவரை 47 கோடிதான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே அகாண்டா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது.