விஜயை கூட்டணிக்கு அழைத்தது அவரின் தனிப்பட்ட கருத்து..! தவெக ஒரு தூய சக்தியான்னு 2026 தேர்தலில் தெரியும்… எடப்பாடி பழனிச்சாமி சுளீர்…!!!
SeithiSolai Tamil December 23, 2025 12:48 AM

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்து செயல்படலாம். இது திமுக ஆட்சியின் கடைசி ஆண்டாகும். இனி திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது,” என்றார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதற்காக திமுக அரசை பாராட்ட மனமில்லை என்றும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை மத்திய அரசே செயல்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மகாத்மா காந்தி பெயரை 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து மாற்றியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரயில் டிக்கெட் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், கடன் பெறுவதில் சாதனை படைத்த ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி அமைந்ததாக குற்றம்சாட்டிய அவர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் திட்டமிட்டே திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கல்விக் கடன் தள்ளுபடி, எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிவிப்புகள் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தங்களது கூட்டணியில் இணைய வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும், தவெக ஒரு தூய கட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.