சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு சிசிடிவி காட்சி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராயல் என்பீல்ட் வாகன ஓட்டி, மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் அந்த இடத்தைக் கடந்து செல்கிறார். ஆனால், அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கவனிக்காமல் ஒரு குழந்தை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் பலரும் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபரை மிகக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். புல்லட் ஓட்டிச் சென்றவர் காட்டிய அந்த நிதானமும் மனிதாபிமானமும் கூட இல்லாமல், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வளவு அஜாக்கிரதையாக வண்டி ஓட்டியது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.