செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது ‘X’ பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மதுரை மாநகரின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், கட்சியின் பெயரிலும் கொள்கையிலும் நீங்காத இடம்பிடித்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானதுடன், “அண்ணாவையே மறந்துவிட்டாரா செல்லூர் ராஜு?” என்ற கேள்விகளையும் எழுப்பியது.
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு அதற்கு உடனடியாக விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், கவனக்குறைவாகவும் பதிவேற்றப்பட்டு விட்டதாகவும், பேரறிஞர் அண்ணாவைத் தவிர்க்க வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “அண்ணா மீது எப்போதும் மாறாத பற்று கொண்டவன் நான்” என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தவறுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.