“நான் என்ன தப்பு பண்ணேன்?”.. உலகக்கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட நட்சத்திரம்! பொங்கிய இர்பான் பதான்..!!!
SeithiSolai Tamil December 22, 2025 09:48 PM

மும்பை: 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதில் அக்சர் படேலுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சு கூட்டணியுடன், தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி20 அணியில் ‘பினிஷர்’ மற்றும் விக்கெட் கீப்பர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஜிதேஷ் சர்மா, உலகக் கோப்பை அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதில் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் சேர்க்கப்பட்டாலும், ஜிதேஷின் நீக்கம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஜிதேஷ் சர்மா தற்போது தான் என்ன தவறு செய்தோம்? எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டோம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்” எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.